மின்வாரிய அதிகாரிக்கு ரூ. 100 கோடி சொத்து...!

மின்வாரிய அதிகாரி ஒருவருக்கு சுமார் ரூ. 100 கோடி அளவில் சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #AndhraPradesh
மின்வாரிய அதிகாரிக்கு ரூ. 100 கோடி சொத்து...!
Published on

நெல்லூர்,

கடந்த மாதம் இந்தியாவின் பணக்கார அலுவலக ஊழியர் ஒருவரை ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இந்நிலையில் இதே போன்று மற்றொரு சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் மின்சாரவாரியத்தில் மின்வாரிய அதிகாரியாக பணிபுரிபவர் எஸ். லஷ்மி ரெட்டி( 56). இவர் 1993-ம் ஆண்டு காவாலி துணை மின்நிலையத்தின் உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் 1996-ம் ஆண்டு உதவி லைன்மேனாக பணிக்கு பதவி உயர்வு பெற்ற அவர் 1997-ம் ஆண்டு லைன்மேன் ஆனார்.

2014-ம் ஆண்டு முதல் போங்கலு மண்டலத்தின் முங்கமுரு கிராமத்தில் மின்வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் அதிகமாக லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து நெல்லூர் மற்றும் அவரது தந்தை மலகொண்டா ரெட்டி வீட்டிலும், அவரது நண்பர்கள் வீடுகளிலும், காவலி நகரில் அவரது வீட்டிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் ரூ.100 கோடி அளவுக்கு, சொத்துக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 57.50 ஏக்கர் விவசாய நிலம், ஆறு ஆடம்பர வீடுகள், இரண்டு பிளாட்டுகள், ரூ. 9.95 லட்சம் வரையிலான வங்கியில் பண இருப்பு மற்றும் பல வாகனங்கள் அடங்கும்.

அவரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் வாரியத்திற்கு சொந்தமான காப்பர் வயர்கள் மற்றும் சில பொருட்களை முறைகேடாக விற்றும் கிடைத்த பணத்தில் சொத்துகளை வாங்கியுள்ளதாகவும், பெரும்பாலான சொத்துகள் அவரது மனைவி எஸ். சுபாஷினி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com