

பெங்களூரு,
கர்நாடகத்தில் மதுபான விலை நிர்ணயம் அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. உற்பத்தியாளர்கள் விலையை அறிவிக்கின்றனர். அதன் அடிப்படையில் அரசு அதிகபட்ச சில்லரை விலையை நிர்ணயம் செய்கிறது. மதுபானம் 16 அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்குக்கும் வெவ்வேறு அளவிலான கலால் வரி விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதில் இருந்து மதுபானங்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. அரசின் வருவாயில் கலால் வரி முக்கிய பங்கு வகிக்கிறது. கர்நாடக காங்கிரஸ் அரசு 5 உத்தரவாத திட்டங்களை அறிவித்துள்ளதால், கடும் நிதிச்சுமையில் தவிக்கிறது. இதனால் நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு அடிக்கடி மதுபானங்களின் வரியை உயர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.
அதன்படி கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2025) மே மாதம் மதுபானங்கள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டது. அப்போது இந்திய தயாரிப்பு மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.45 வரை உயர்ந்தது. இதனால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் புதிய மதுபான கொள்கையை அரசு அறிவித்தது. அதாவது நாட்டிலேயே முதல் முறையாக மதுபானத்தில் உள்ள ஆல்கஹாலின் அளவை பொறுத்து வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பட்ஜெட்டில் அறிவித்தப்படி ஆல்கஹாலின் அளவுக்கு ஏற்றார்போல் வரி விதிக்கும் முறையை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி புதிய மதுபான கொள்கை தொடர்பான அரசாணையை கர்நாடக அரசு பிறப்பித்தது. அந்த அரசாணையில், புதிய மதுபான கொள்கையின்படி மதுபானங்கள் மீதான வரி 20 சதவீதம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் மதுபான பாட்டிலில் உள்ள ஆல்கஹால் அளவின் அடிப்படையில் வரி விதிக்கப்படும். அதாவது, மதுபானத்தில் ஆல்கஹால் அளவு அதிகமாக இருந்தால், வரியும் அதிகமாக இருக்கும். இந்தப் புதிய கொள்கையின் காரணமாக, குறைந்த ஆல்கஹால் அளவு கொண்ட உயர்தர மதுபானங்களின் விலை சிறிதளவு குறைய வாய்ப்பிருந்தாலும், சாமானிய மக்கள் பயன்படுத்தும் மதுபானத்தின் விலை 20 சதவீதம் அதிகரிக்கும்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் புதிய விலை உயர்வு மே மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் மதுபானங்கள் மீதான விலை உயர்வு 5-வது முறை ஆகும். இந்த விலை உயர்வு கர்நாடகத்தின் கலால் வருவாயில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை கொண்டுள்ள முதல் 4 விலை நிர்ணய அடுக்குகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதாவது இந்திய நாட்டு தயாரிப்பு மதுபானங்களான விஸ்கி, ரம், பிராந்தி, ஜின் போன்றவற்றின் விலை குவார்ட்டருக்கு ரூ.15 முதல் ரூ.25 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ரூ.80-க்கு விற்கப்பட்ட (குவார்ட்டருக்கு) மதுபானம் ரூ.95 ஆகவும், ரூ.95-க்கு விற்கப்பட்ட மதுபானம் ரூ.110 ஆகவும், ரூ.120-க்கு விற்கப்பட்ட மதுபானம் ரூ.135 ஆகவும், ரூ.150-க்கு விற்கப்பட்ட மதுபானம் ரூ.170 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு முழு மதுப்பாட்டிலின் அதிகபட்ச சில்லரை விலை (எம்.ஆர்.பி.) ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகரிக்கும். மதுபான விடுதி மற்றும் உணவகங்களில் சேவை கட்டணங்கள் சேர்க்கப்படுவதால், இந்த விலை மேலும் அதிகரிக்கக்கூடும்.
அதே நேரத்தில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை 5 முதல் 15 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது. அதாவது பிளாக் டாக் மற்றும் பிளாக் அன்ட் ஒயிட், ஸ்காட்ச் போன்ற உயர்தர இறக்குமதி மதுபானங்கள் விலை குறையக்கூடும். ஆனால், டி.எஸ்.பி. பிளாக் டீலக்ஸ் போன்ற குறைந்த விலை இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களின் விலை 11 முதல் 16 சதவீதம் வரை அதிகரிக்கும்.
அதே சமயம் பீர் விலைகளிலும் குறிப்பாக அதிக ஆல்கஹால் உள்ளடக்கம் கொண்ட பீர்களின் விலைகளிலும் சிறிய அளவு உயர்வு ஏற்படலாம்.
கடந்த 3 ஆண்டுகளில் மதுபானங்களின் விலை 5 முறை உயர்த்தப்பட்டதால் மதுப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.