ஊழல் இல்லாத நாடுகள் பட்டியல் பட்டியல்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

மொத்தம் 180 நாடுகள் இந்தப் பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 179-வது இடத்தில் சோமாலியாவும், 178-வது இடத்தில் வெனிசூலாவும் இடம்பெற்றுள்ளன.
புதுடெல்லி,
உலகில் ஊழல் இல்லாத, அல்லது ஊழலை கட்டுப்படுத்த போராடும் நாடுகளும் உள்ளன. அந்த வகையில், உலகில் எந்தெந்த நாடுகளில் ஊழல் மிகக் குறைவாக உள்ளது, அதற்கான காரணங்கள் என்ன என்பதைக் குறித்து ஆய்வு செய்து ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், உலகில் ஊழல் மிகக் குறைவாக நடைபெறும் டாப்-10 நாடுகளின் பட்டியல், கரப்ஷன் பெர்செப்ஷன் இன்டெக்ஸ் (Corruption Perceptions Index) என்ற அறிக்கையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் டென்மார்க், பின்லாந்து, சிங்கப்பூர், நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, நார்வே, லக்சம்பர்க், சுவீடன், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறையே இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா 96-வது இடத்தில் உள்ளது. அண்டை நாடான சீனா 76-வது இடத்திலும், பாகிஸ்தான் 135-வது இடத்திலும் உள்ளன. கடைசி இடத்தில் தெற்கு சூடான் உள்ளது. மொத்தம் 180 நாடுகள் இந்தப் பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 179-வது இடத்தில் சோமாலியாவும், 178-வது இடத்தில் வெனிசூலாவும் இடம்பெற்றுள்ளன.
முதலிடத்தில் உள்ள டென்மார்க் இந்த ஆண்டு மட்டும் இல்லை. கடந்த பல ஆண்டுகளாகவே உள்ளது. இதற்கு கடுமையான சட்டங்கள், வெளிப்படையான நிர்வாகம் மற்றும் வலுவான பொது நம்பிக்கை ஆகியவை காரணமாக உள்ளது. இந்த நாட்டில் அதிகாரிகள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பு கூற கடமைப்பட்டவர்கள். மேலும் அரசியல் முடிவுகளைப் பொதுமக்கள் மதிப்பாய்வு செய்யலாம். இங்கு குடிமக்கள் அனைவரும் சேவைகளை சமமாகப் பெறும் வாய்ப்பு இருப்பதால், லஞ்சம், ஒருதலைபட்சம் என்பதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.






