

புதுடெல்லி
ஹார்மூஸ் ஜலசந்தியில் நிறைய கப்பல்கள் தேங்கியுள்ளன. அவற்றில் இந்திய கப்பல் ஊழியர்கள் சிக்கியுள்ளனர் என பிரதமர் மோடி பேசினார்.
மேற்காசிய மோதல் தொடர்பாக பிரதமர் மோடி மக்களவையில் நேற்று பேசிய நிலையில், மாநிலங்களவையில் இன்று பேசி வருகிறார். அவர் பேசும்போது, வளைகுடா நாடுகளில் 1 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்ந்தும், வேலை செய்தும் வருகின்றனர்.
அவர்களின் பாதுகாப்பு அரசுக்கு மிக முக்கியம். ஹார்மூஸ் ஜலசந்தியில் நிறைய கப்பல்கள் தேங்கியுள்ளன. அவற்றில் எண்ணற்ற இந்திய கப்பல் ஊழியர்களும் சிக்கியுள்ளனர். இதுவும் இந்தியாவுக்கு அதிக கவலையளிக்க கூடிய ஒரு விசயம்.
இந்த கடினம் வாய்ந்த சூழலில், இந்தியாவின் மேலவை ஒருமித்த குரலில் அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கான செய்தியை உலக நாடுகளுக்கு அனுப்ப வேண்டியது அவசியம் என்றார். மேற்காசிய மோதல் தொடர்பாக நாளை (25-ந்தேதி) அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் நாட்டை கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.
போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா., உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி வந்த போதிலும், 3 வாரங்களுக்கும் மேலாக மோதல் முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது.