முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.39½ லட்சம் கோடி கடன் உதவி: நிர்மலா சீதாராமன்

முத்ரா திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.39½ லட்சம் கோடி கடன் உதவி: நிர்மலா சீதாராமன்
Published on

புதுடெல்லி,

பிரதமரின் முத்ரா யோஜனா திட்டம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்து கூறியதாவது:-

பிரதமரின் முத்ரா யோஜனா திட்டம் ஏராளமான சிறு தொழில்முனைவோருக்கு பயனளித்துள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை ரூ.39.48 லட்சம் கோடி கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது வங்கி கடன் வழங்கும் திட்டங்களில் முக்கியமான ஒன்றாகும். பிணையாக வழங்குவதற்கு எந்த சொத்தும் இல்லாத மக்களையும் இத் திட்டம் சென்றடைந்துள்ளது.

முத்ரா திட்டத்தில் 'சிசு', 'கிஷோர்' மற்றும் 'தருண்' என மூன்று பிரிவுகள் உள்ளன. 'சிசு' பிரிவில் வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையில் 12.4 சதவீதம் நிலுவையில் உள்ளது. 'கிஷோர்' பிரிவில் 9.48 சதவீதமும், 'தருண்' பிரிவில் வழங்கப்பட்ட மொத்த தொகையில் 7.92 சதவீதமும் நிலுவையில் உள்ளன.

இந்த நிலுவை கடன்களை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளில் வங்கிகள் ஈடுபட்டு வருகின்றன. பிரிவு வாரியாக பார்க்கும்போது, வராக்கடன் விகிதமானது 'சிசு' பிரிவில் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த பிரிவின் கீழ் வழங்கப்பட்ட மொத்த தொகையில் இது வெறும் 1.83 சதவீதம் மட்டுமே வராக்கடன் இருக்கிறது.

தங்கள் தொழிலை வளர்ப்பதற்காக சிறிய அளவிலான கடன்களை பெறும் மக்களுக்கு 'சிசு' பிரிவின் கீழ் கடன்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் மொத்த வராக்கடன்கள், மொத்த கடன் தொகையில் சுமார் 2 சதவீதமாக மட்டுமே உள்ளன. எனவே, வராக்கடன்கள் மிக அதிக அளவில் குவிந்துவிட்டன என்றோ அல்லது அவை பரவலாக பெருகிவிட்டன என்றோ சொல்ல முடியாது.

வராக்கடன்களை வசூலிக்க வங்கிகள் எடுத்துள்ள நடவடிக்கைகளில், தொடர் கண்காணிப்பு மற்றும் பின்தொடர்தல், வாடிக்கையாளர்களுட னான தொடர்பை அதிகப்படுத்துதல், தவணைகளை மறுசீரமைத்தல் மற்றும் ‘ஒருமுறை தீர்வு திட்டம்' ஆகியன அடங்கும். முத்ரா திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com