உள்ளாட்சி தேர்தல்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு- பசவராஜ் பொம்மை

உள்ளாட்சி தேர்தல்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு- பசவராஜ் பொம்மை
Published on

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது குறித்து நேற்று(நேற்று முன்தினம்) நடந்த மந்திரிசபை கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், இதற்காக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்வது என்று மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் வக்கீல்கள் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள். மாநகராட்சி, மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்காமல் தேர்தலை நடத்த சாத்தியமில்லை. கர்நாடக அரசின் முடிவு பற்றி சுப்ரீம் கோர்ட்டில் தெளிவாக எடுத்து கூறப்படும்.

தேர்தல் நடத்த சாத்தியமில்லை

உள்ளாட்சி தேர்தல்களில் பழைய இடஒதுக்கீடுகளுக்கு பதிலாக புதிதாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வாதிடப்படும். இந்த விவகாரத்தில் அரசுக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசால் அமைக்கப்பட்ட ஆணையம் அளிக்கும் அறிக்கையும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.

இதற்காக குறைந்த பட்சம் 3 மாதங்கள் காலஅவகாசம் கொடுக்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் கேட்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்காமல் தேர்தலை நடத்த சாத்தியமில்லை என்ற முடிவு அரசு மற்றும் நமது கட்சியின் நிலைப்பாடு ஆகும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கூட அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறது. அதனையும் அரசு பரிசீலித்து கொள்ளும்.

அருண்சிங்குடன் ஆலோசனை

வருகிற 14-ந் தேதி(அதாவது இன்று) பெங்களூருவில் பா.ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநிலங்களவை தேர்தல், கர்நாடக மேல்-சபை தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும். ஏற்கனவே தேர்தல் விவகாரம் குறித்து மாநில தலைவர் நளின்குமார் கட்டீலுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறேன்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்க பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண் சிங் பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார். அவர் மற்றும் பா.ஜனதா தலைவர்களுடன் ஆலோசித்து வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யப்படும். இந்த கூட்டத்தில் கட்சியை பலப்படுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com