

புதுடெல்லி,
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கடந்த 6-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மாநில தேர்தல் ஆணையமும், மறுவரையறை ஆணையமும் பின்பற்றவில்லை என்று கூறி முதல்-அமைச்சர், தேர்தல் அதிகாரி உள்ளிட்டவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் தி.மு.க. சார்பில் தமிழக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உள்ளிட்டோர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு மேலும் ஒரு வழக்கு தொரடப்பட்டுள்ளது.
அந்த மனுவில், மாநில தேர்தல் ஆணையம் 2019-ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 27 மாவட்டங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களிலும் இட ஒதுக்கீடு மற்றும் மறுசுழற்சி தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. இது கடந்த 11-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானதாகும். எனவே மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.