

புதுடெல்லி,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க கடந்த செப்டம்பர் 27-ந் தேதி பிறப்பித்த உத்தரவு நேற்றுடன் நிறைவடைந்தநிலையில், 40 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் வக்கீல் கே.கிருஷ்ணகுமார் மனு தாக்கல் செய்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டு நடத்த முடியாமல் போனதற்கு வடகிழக்கு பருவமழை வெள்ளம், டிசம்பர் இறுதியில் நிறைவுற்ற வார்டு மறுவரை பணிகள், புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகளில் இட ஒதுக்கீடு நடைமுறைகள், தமிழகத்தில் மூன்றாவது கொரோனா அலையால் இரவு நேர மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு, தேர்தல் பணியாளர்களை நியமிப்பதில் ஏற்பட்ட தொய்வு போன்ற காரணங்களால் நகர்ப்புற தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதையும், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கை ஜனவரி 26-ந் தேதி வெளியிட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பணிகளை நிறைவு செய்ய மேலும் 40 நாட்கள் அவகாசத்தை அளிக்குமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.