மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம்; எதிர்க்கட்சிகள் அமளியால் அவை ஒத்திவைப்பு

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம்; எதிர்க்கட்சிகள் அமளியால் அவை ஒத்திவைப்பு
Published on

டெல்லி,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7ம் தேதி இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. 3 நாட்கள் நடந்த மோதல் இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது.

இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதுமுதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

அதேவேளை, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரங்கள் குறித்து இன்று முதல் விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி, இரு அவைகளிலும் தலா 16 மணிநேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் மதியம் 12 மணிக்கு விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேச உள்ளனர்.

ஆனால், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் தொடங்கியதுமே பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மதியம் 1 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com