எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம்: மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம்: மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது. கடந்த 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன்பிறகு மறுநாளில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்கள் இரு அவைகளிலும் நடைபெற்றன.

மக்களவையில் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி பேசும்போது, சீன ஆக்கிரமிப்பு தொடர் பான எம்.எம்.நரவனேயின் கட்டுரைக் குறிப்புகளை சுட்டிக்காட்ட முயன்றதால் பேசுவதற்கான அனுமதியை அவர் இழந்தார். இதனை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவைக்குள் போராட்டம் நடத்தினர். இதில் ஒழுங்கீன செயல்களுக்காக 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கிடையே அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தையும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்த்தனர்.

இதுபோன்ற விஷயங்களில் எதிர்க்கட்சியினரின் அமளியால் கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்களும் தொடர்ச்சியாக அவை செயல்படவில்லை. அடுத் தடுத்து ஒத்திவைக்கப்பட்டதால் அவை முடங்கியது.

இந்தநிலையில் நேற்றும் 6-வது நாளாக அவை செயல்படவில்லை. காலையில் 11 மணிக்கு கூட்டம் தொடங்கியபோது. இந்தியாவின் இளம் கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கேள்விநேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைவிடாத அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து சபாநாயகர் ஒம் பிர்லா பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.

பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது வழக்கமான அலுவல்கள் முடிக்கப்பட்டன. தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்துக்கு காங்கிரஸ் தரப்பில் சசிதரூர் எம்.பி.யை சபாநாய கர் (கிருஷ்ணபிரசாத் தென்னட்டி) அழைத்தார். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேச எழுந்தார்.

ஆனால் கட்சி சார்பில் சசிதரூர் பெயரே தரப்பட்டுள்ளது என்றும், எனவே அவர்தான் பேச வேண்டும் என்றும், ராகுல்காந்திக்கு பின்னர் தரப்படும் என்றும் சபாநாயகர் கூறினார்.

ஆனால் ராகுல்காந்தி பேசுவதிலேயே முனைப்பாக இருந்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவருக்கு பேச அனுமதி வழங்குமாறு கேட்டனர். அப்போது சபாநாயகர், பட்ஜெட் குறித்து பேசுவதாக இருந்தால் பேசலாம் என்றார். ஆனால் வேறு விஷயம் பேச ராகுல்காந்தி முற்பட்டதாக தெரிகிறது.

இதனால் சபாநாயகர் அனுமதி மறுத்தார். எதிர்க்கட்சியினர் இதனை கண்டித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அவை கூடியது. சபாநாயகர் இருக்கையில் சந்தியா ராய் அமர்ந்தார். பட்ஜெட் மீதான விவாதத்தை அவர் தொடங்கினார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழக்கம்போல அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை இன்று காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்தநிலையில், இன்றும், மக்களவை கூடியதும் ராகுல் காந்தியை பேச அனுமதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கல் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை முடங்கியது. அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அவையில் மத்திய மந்திரிகள் மேஜை அருகே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மந்திரிகள் கை கூப்பி கோரிக்கை வைத்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் இருக்கைக்கு செல்ல மறுப்பு தெரிவித்து விட்டனர். மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஓம்.பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com