

புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 15-வது நாள் அமர்வு இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல தொடங்கியது. அவை தொடங்கியவுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை மற்றும் ராமர் கோவில் நன்கொடைகள் திருடப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து அரசிடம் இருந்து பதில் கோரி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மக்களவை நடவடிக்கைகள் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
அவைக்குத் தலைமை தாங்கிய ஆர்எஸ்பி கட்சியைச் சேர்ந்த என்.கே. பிரேமச்சந்திரன், கேள்வி நேரத்தின் முதல் கேள்வி எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்றைய அவைக் கூட்டம் தொடங்கிய சில நொடிகளிலேயே நடவடிக்கைகளை ஒத்திவைத்தார். வழக்கமாக கேள்வி நேரத்திற்குத் தலைமை தாங்கும் சபாநாயகர் ஓம் பிர்லா, இன்று காலை அவையில் பங்கேற்கவிலை.
தொடர்ந்து மூன்று வாரங்களாக மக்களவையால் கேள்வி நேரத்தை முழுமையாக நடத்த முடியவில்லை. மேலும், கேள்வி நேரத்தை முழுமையாக நடத்த முடியாத 16-வது நாள் இதுவாகும்.