பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை சுமலதா

பா.ஜ.க.வில் இன்று இணைய உள்ளதாக நடிகை சுமலதா தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை சுமலதா
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் உள்ள மாண்டியா தொகுதி எம்.பி. யாக இருப்பவர் நடிகை சுமலதா. இவர் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் உள்ள மாண்டியா தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனால், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மாண்டியா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாண்டியா தொகுதியை மதசார்பற்ற ஜனதா தள கட்சிக்கு பா.ஜ.க. ஒதுக்கியது. அந்த தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தள தலைவரும், கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி போட்டியிடுகிறார்.

இதையடுத்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட போவதில்லை என்று நடிகை சுமலதா அறிவித்திருந்தார். அத்துடன் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன்படி பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பா, மாநில தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா, முன்னாள் முதல்-மந்திரி டி.வி.சதானந்த கவுடா உள்ளிட்டோர் முன்னிலையில் நடிகை சுமலதா இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

முன்னதாக, பா.ஜ.க.வில் இன்று இணைய உள்ளதாக நடிகை சுமலதா தனது எக்ஸ் தளத்தில அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதில், மாண்டியா தொகுதியின் விரிவான வளர்ச்சியே எனது அடிப்படை மந்திரமாக வைத்துள்ளேன். மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்ற நம்பிக்கையில் பா.ஜனதாவை ஆதரிப்பதாக அறிவித்திருந்தேன். அதன்படி பா.ஜ.க. தலைவர்கள் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைகிறேன். உங்களது வாழ்த்துக்களும், ஆசிகளும் வழக்கம்போல இருக்கட்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அத்துடன் மாண்டியா தொகுதியில் தான் செய்த பணிகள் குறித்த தகவல்களை அதில் இணைந்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com