பார்வையாளர்களாக வந்து பயம் காட்டிய நபர்கள்.. நாடாளுமன்றத்தில் விசிட்டர் பாஸ் வழங்குவது நிறுத்தம்

நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையிலான எந்த பொருளும் காணப்படவில்லை.
பார்வையாளர்களாக வந்து பயம் காட்டிய நபர்கள்.. நாடாளுமன்றத்தில் விசிட்டர் பாஸ் வழங்குவது நிறுத்தம்
Published on

புதுடெல்லி:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்த அந்த நபர்கள், கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகள் போன்ற பொருளை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியாகி மக்களவை முழுவதும் பரவியது. அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகையை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து, அச்சுறுத்திய இருவரின் அடையாளம் தெரிந்தது. அவர்கள் மைசூரை சேர்ந்த மனோரஞ்சன், சாகர் ஷர்மா என டெல்லி காவல்துறை தெரிவித்திருக்கிறது. கர்நாடக பாஜக எம்.பி. வழங்கிய அனுமதி சீட்டில் இருவரும் உள்ளே நுழைந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதேபோல் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டவர்கள் அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த நீலம் (வயது 42), மராட்டிய மாநிலம் லத்தூர் பகுதியைச் சேர்ந்த அமோல் ஷிண்டே (வயது 25) என்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கான அனுமதி சீட்டு (விசிட்டர் பாஸ்) வழங்குவது நிறுத்தப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகம் முழுவதும் சோதனையிடப்பட்டது. இந்த சோதனையின்போது பயப்படும்படியாகவோ, ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையிலோ எந்த பொருளும் காணப்படவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com