சட்டசபைகள் பதவிக்காலத்தை நீட்டித்தோ, குறைத்தோ 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் அனைத்து சட்டசபைகளுக்கும் தேர்தல் - சட்ட ஆணையம் பரிசீலனை

மாநில சட்டசபைகளின் பதவிக்காலத்தை நீட்டித்தோ அல்லது குறைத்தோ 2029-ம் ஆண்டில் இருந்து நாடாளுமன்ற, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்ட ஆணையம் திட்டம் வகுத்து வருகிறது.
filepic
filepic
Published on

புதுடெல்லி,

வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கவும், செலவை குறைக்கவும் நாடாளுமன்றம், மாநில சட்டசபைகள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத் தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது.

நாடாளுமன்றம், சட்டசபைகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் காவிந்த் தலைமையில் உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இதற்கிடையே, சட்ட ஆணையமும் இந்த விவகாரத்தை பரிசீலித்து வருகிறது. அதன் அறிக்கை இன்னும் தயாராகவில்லை.

இருப்பினும், இதுபற்றி சட்ட ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:-

2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களை நடத்தலாம் என்று சட்ட ஆணையம் கருதுகிறது. 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை நடத்தும்போது, மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் வெவ்வேறாக இருக்கும்.

எனவே, மாநில சட்டசபைகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கவோ அல்லது குறைக்கவோ சட்ட ஆணையம் சிபாரிசு செய்யும்.

அதன்மூலம், 2029-ல் இருந்து நாடாளுமன்ற, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். இதற்கான திட்டத்தை சட்ட ஆணையம் வகுத்து வருகிறது.

நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்தால், வாக்காளர்கள், இரண்டு தடவை வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். அதை தவிர்த்து, வாக்காளர்கள் ஒருதடவை மட்டும் வாக்குச்சாவடிக்கு செல்லும்வகையில் சட்ட ஆணையம் திட்டம் வகுத்து வருகிறது.

நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி மட்டுமே சட்ட ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. ஆனால், ராம்நாத் கோவிந்த் குழு, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி ஆய்வு செய்வதால், சட்ட ஆணையமும் உள்ளாட்சி தேர்தலையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

உள்ளாட்சி தேர்தலுக்கு தனி வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் மனித உழைப்பை தவிர்க்க, எல்லா தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியலை பயன்படுத்துவதற்கான திட்டத்தை சட்ட ஆணையம் வகுத்து வருகிறது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிப்பதற்கான வயது வரம்பு, 'போக்சோ' சட்டப்படி 18 ஆக உள்ளது. அதை மாற்றி அமைப்பது குறித்து ஆராய்ந்த சட்ட ஆணையம், தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

அதில், பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிப்பதற்கான வயதுவரம்பை குறைக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது.

அதே சமயத்தில், 16 முதல் 18 வயதுடைய குழந்தைகள், பாலியல் உறவுக்கு மறைமுக சம்மதம் தெரிவித்தது தொடர்பான வழக்குகளை கையாள 'போக்சோ' சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com