பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர்: ஓகி புயல் குறித்து இன்று மக்களவையில் விவாதம்

தமிழகம், கேரளா, லட்சத்தீவில் பெருத்த சேதத்தை ஏற்படுத்திய ஓகி புயல் விவகாரம் குறித்து மக்களவையில் விதி எண் 193-ன் கீழ் விவாதம் நடத்தப்படுகிறது
பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர்: ஓகி புயல் குறித்து இன்று மக்களவையில் விவாதம்
Published on

புதுடெல்லி,

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கியது. பாராளுமன்றம் துவங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் அதிகாரிகளை சந்தித்ததாக பிரதமர் மோடி பேசியது குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மன்மோகன் சிங் குறித்து பேசியதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளிப்பதுடன் மன்னிப்பும் கோர வேண்டும் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், தமிழகம், கேரளா லட்சத்தீவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஓகி புயல் குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடத்தப்பட உள்ளது. கேள்வி நேரம் முடிந்ததும், ஒகி புயல் குறித்த விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற விதி 193-ன் கீழ் ஒகி புயல் குறித்த விவாதம் நடைபெற உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா (மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குதல்) 2017- ஐ நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று மக்களவையில் அறிமுகப்படுத்த உள்ளார்.

பாரளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார், இந்த விவகாரம்( ஒகிபுயல்) காங்கிரஸ் கட்சியால் அரசியல் ஆக்கப்படாது என நம்புகிறேன். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் இந்த விவாதத்தில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

இதற்கிடையில், மன்மோகன் சிங் மீது பிரதமர் மோடி முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து ஆலோசிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர கோரி காங்கிரஸ் கட்சி தரப்பில் மாநிலங்களவையில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com