லண்டனில் குடியேற விரும்பிய தம்பதி.. கலைந்த கனவு... இதயத்தை உலுக்கும் கடைசி செல்பி


லண்டனில் குடியேற விரும்பிய தம்பதி.. கலைந்த கனவு... இதயத்தை உலுக்கும் கடைசி செல்பி
x

ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.

ஆமதாபாத்,

ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான டிரீம்லைனர் விமானம் ஒன்று லண்டனுக்கு நேற்று மதியம், 23-வது ஓடுபாதையில் இருந்து புறப்பட தயாராக இருந்தது.விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர்.

புறப்படுவதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் முடிந்ததும், சரியாக 1.39 மணிக்கு அந்த விமானம் புறப்பட்டது. விமானத்தை சபீர் சபர்வால் என்ற விமானி ஓட்டினார். அவருக்கு துணையாக கிளைவ் குந்த் என்ற துணை விமானியும் இருந்தார். அந்த விமானம் வானில் பறந்த சில நிமிடங்களில், அதாவது தரையில் இருந்து 825 அடி உயரத்தை எட்டியபோது, விமானியிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு 'மே டே அழைப்பு' எனப்படும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலையிலான அவசர அழைப்பு வந்தது.

அதை ஏற்றுக்கொண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மீண்டும் விமானியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அதற்குள் விமானத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. சில நிமிடங்களில் அந்த விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில், மருத்துவ மாணவர்கள் விடுதியின் மீது விமானம் மோதி விழுந்தது.

ஏர் இந்தியா வெளியிட்ட தகவல்படி, இந்த விமானத்தில், 169 இந்தியப் பயணிகள், 61 வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் 2 பைலட்டுகள், விமானப் பணியாளர்கள் 10 பேர் என மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்நிலையில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த விபத்து விமானத்தில் பயணித்தவர்களின் நம்பிக்கையைப் பறித்து, அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் ஒன்று பிரதிக் ஜோஷியின் குடும்ப மரணம்.

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியைச் சேர்ந்தவர் பிரதிக் ஜோஷி. மனைவி, குழந்தைகளைப் பிரிந்து கடந்த ஆறு ஆண்டுகளாக லண்டனில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், புதிய வாழ்க்கையைத் தொடங்க, குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற, மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்ய மூன்று குழந்தைகளையும், மனைவியையும் லண்டனுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

அதற்காக டாக்டரான அவரின் மனைவி கோமி வியாஸ் தன் பணியை இரண்டு தினங்களுக்கு முன்புதான் ராஜினாமா செய்திருக்கிறார். எனவே பெரும் கனவுடன் ஏர் இந்தியா விமானத்தில் ஏறி அமர்ந்திருக்கிறது குடும்பம். துரதிஷ்டமாக நடந்த இந்த விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இவர்களின் இழப்பு குறித்து அவர்கள் வசித்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, "இருவரும் லட்சியவாதிகள், கடின உழைப்பாளிகள். இருவரும் நன்கு படித்தவர்கள். குழந்தைகளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்" என்று சோகத்துடன் கூறினர்.

1 More update

Next Story