

புதுடெல்லி,
2021-22-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தொடர்பாக மாநிலங்களவையில் நடந்த விவாதத்துக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பதிலளித்தார்.
அப்போது அவர் பட்ஜெட்டின் பெருமிதங்களை எடுத்து வைத்ததுடன், அது குறித்து விமர்சித்த முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரையும் கடுமையாக தாக்கி பேசினார்.
பட்ஜெட் விவாதத்துக்கு பதிலளித்து பேசியபோது நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
இந்த பட்ஜெட், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், பொருளாதார சீர்திருத்தங்களை வலியுறுத்தும் வகையிலும் முற்றிலுமாக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர் நடவடிக்கைகள் ஆகும். அவை இந்த பட்ஜெட்டை முன்னோக்கி கொண்டு செல்லும்.
இதில் சாதாரண மனிதனின் நலன்கள் மையமாக மாற்றப்பட்டுள்ளன. அவை வரி செலுத்துவோரின் பணத்தை நேர்மையாக பயன்படுத்தும்.
மத்திய பட்ஜெட் தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு ஒரு அடி முன்னே எடுத்து வைத்துள்ளது. அந்த வகையில் நீண்டகால வலுவான தூண்டுதலை வழங்கவும், அந்த தூண்டுதல் பெருக்க விளைவை கொண்டு வரும் வகையிலும் பட்ஜெட்டில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
மேலும் நடுத்தர முதல் நீண்டகால நிலையான வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதுவே இந்தியாவை அத்தகைய வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்வதுடன், உலகில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக நீடிக்கவும் செய்யும்.
கொரோனா ஊரடங்கு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை பாதித்ததால், மார்ச்சில் முடிவடையும் இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 7.7 சதவீதம் வீழ்ச்சியடையும் என கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அடுத்த நிதியாண்டில் பொருளாதாரம் வேகமெடுக்கும். குறிப்பாக 11 சதவீதம் அளவுக்கு உயரும் என பல்வேறு கணிப்புகள் தெரிவித்து உள்ளன.
கொரோனாவுக்கு பின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால இலக்குகளின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை பட்ஜெட்டில் அரசு அறிவித்து உள்ளது. குறிப்பாக இந்திய பொருளாதாரத்தின் 13 சதவீதம் அளவுக்கு அவை அமைந்துள்ளன.
உள்கட்டமைப்பு உருவாக்கம், தொடர் சீர்திருத்தங்கள், கணக்குகளில் வெளிப்படைத்தன்மை ஆகியவை இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் ஆகும். 130 கோடி இந்தியர்களின் வாஞ்சைக்குரிய பட்ஜெட்டாகும்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அது அன்னிய நேரடி முதலீட்டை அதிகரித்தது. சிறு தொழில்துறைக்கு அரசு உதவி அளித்தது. இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரித்து, மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்க முடிந்தது. இ்வ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (100 நாள் வேலை திட்டம்) பட்ஜெட் ஒதுக்கீட்டை நிறைவேற்றவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிர்மலா சீதாராமன் தனது பதில் உரையில் மறுத்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த திட்டத்துக்கு பிறப்பை நீங்கள் கொடுத்திருக்கலாம். ஆனால் அதை குழப்பத்திலேயே விட்டுவிட்டீர்கள். ஆனால் அதில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் நாங்கள் தீர்த்து, வலிமையாக செயல்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.
கொரோனா தாக்குதலுக்கு முன், 2020-21-ம் நிதியாண்டில் ரூ.61 ஆயிரம் கோடியை இந்த திட்டத்துக்காக ஒதுக்கியதாக கூறிய நிர்மலா சீதாராமன், தற்போது வரை ரூ.90 ஆயிரம் கோடிக்கு மேல் செலவழித்திருப்பதாகவும், இது இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகவும் என்றும் தெரிவித்தார்.