தமிழ்நாட்டிற்கு செல்வதை எதிர்நோக்கி இருக்கிறேன்: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி நாளை திருச்சி வருகிறார்.
தமிழ்நாட்டிற்கு செல்வதை எதிர்நோக்கி இருக்கிறேன்: பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

திருச்சி பஞ்சப்பூர் அருகே பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி திருச்சி விமான நிலையத்தில் இருந்து மாலை 4.30 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் பஞ்சப்பூருக்கு செல்கிறார். கூட்டம் முடிந்ததும், அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து இரவு 8.20 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

இந்த நிலையில், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

எர்ணாகுளம் மற்றும் திருச்சியில் நாளை, மார்ச் 11 அன்று, நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கேரளம் மற்றும் தமிழ்நாட்டிற்கு செல்வதை நான் எதிர்நோக்கி இருக்கிறேன். கேரளம் சென்றதும், அகில கேரள தீவர சபையின் பொன்விழா கொண்டாட்டங்கள் முதல் நிகழ்ச்சியாக உள்ளது. மீனவர் நலனுக்காக இந்த அமைப்பு செய்து வரும் பணிகள் குறிப்பிடத்தக்கவை.

அதன்பின், அடுத்தடுத்த நிகழ்ச்சியில், பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும் அல்லது நிறைவடைந்த வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்படும் . இந்தப் பணிகள் எரிசக்தி, நெடுஞ்சாலைகள், கிராமப்புற உள்கட்டமைப்பு, ரெயில்வே மற்றும் பல துறைகளைச் சேர்ந்தவையாகும்.

திருச்சியில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சாலைகள், ரெயில்வே மற்றும் பல துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களை நாளை நான் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளேன். நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பி.பி.சி.எல். நகர எரிவாயு விநியோக வலையமைப்பிற்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களும் இதில் அடங்கும். 89 கிராம சாலைத் திட்டங்களும் தொடங்கி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com