மராட்டிய ஊர்க்காவல் படை டி.ஜி.பி பரம்பீர் சிங் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க நோட்டீஸ்

தானேயில் தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஊர்க்காவல் படை டி.ஜி.பி. பரம்பீர் சிங் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மராட்டிய ஊர்க்காவல் படை டி.ஜி.பி பரம்பீர் சிங் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க நோட்டீஸ்
Published on

பணம் பறித்த வழக்கு

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிகுண்டு கார் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கு மற்றும் அந்த காரின் உரிமையாளர் ஹிரன் மன்சுக் கொலை செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்து, மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் ஊர்க்காவல் படைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவர் உள்துறை மந்திரியாக இருந்த அனில்தேஷ்முக் மீது மாதம் ரூ.100 கோடி மாமூல் புகாரை கூறி பதவி ராஜினாமா செய்ய காரணமாக இருந்தார். தற்போது அனில் தேஷ்முக் மீதான புகார் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.இதேபோல ஐ.பி.எஸ். அதிகாரி பரம்பீர் சிங்கிற்கு எதிராகவும் பலர் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து உள்ளனர். இதில் தானேயை சேர்ந்த தொழில் அதிபர் கேத்தன் தன்னா அளித்த புகாரில், பரம்பீர் சிங் தானே போலீஸ் கமிஷனராக இருந்தபோது தன் மீது வழக்குப்பதிவு செய்துவிடுவதாக மிரட்டி ரூ.1 கோடி பறித்ததாக கூறியிருந்தார்.இந்த புகார் குறித்து தானே நகர் போலீசார் பரம்பீர் சிங், துணை கமிஷனர் தீபக் தேவ்ராஜ், உதவி கமிஷனர் நிவ்ருதி கதம், சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப் சர்மா, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் கோத்மிரே உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

லுக் அவுட் நோட்டீஸ்

இந்தநிலையில் தானே நகர் போலீசார் தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பரம்பீர் சிங்கிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளனர். லுக் அவுட் நோட்டீஸ் என்பது குற்ற வழக்கில் ஈடுபடுபவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயன்றால், அவர்களை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தும் பணியாகும். எனவே பரம்பீர் சிங் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரம்பீர் சிங் தற்போது ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக இருக்கும் நிலையில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல தானே கோப்ரி போலீஸ் நிலையத்திலும் பரம்பீர் சிங் மற்றும் துணை கமிஷனர் பரக் மனேரேக்கு எதிராக மிரட்டி பணம் பறித்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் பரம்பீர் சிங்கை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நோட்டீசை பிறப்பிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com