கடைகளுக்குள் லாரி புகுந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஐயப்ப பக்தர்கள்

லாரியின் பிரேக் பழுதானதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி திடீரென பின்னோக்கி சென்று விபத்து ஏற்பட்டுள்ளது.
ஐயப்ப பக்தர்கள் உயிர் தப்பினர்.
கடைக்குள் புகுந்த லாரி
Published on

திருவனந்தபுரம்,

தமிழக – கேரள எல்லைப் பகுதியான குமுளி செக்போஸ்ட் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று சாலையோரக் கடைகளுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் அங்கிருந்த சபரிமலை ஐயப்ப பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

லாரி கடைகளுக்குள் புகுந்து விபத்து

தமிழகத்தில் இருந்து மின்சார உபகரணங்களை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி இன்று (வியாழக்கிமை) அதிகாலையில் ஒரு சரக்கு லாரி சென்றது. கேரள போலீசாரின் வழக்கமான சோதனைக்காக, குமுளி எல்லை சோதனைச் சாவடி அருகே அந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் பிரேக் பழுதானதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி திடீரென பின்னோக்கி செல்லத் தொடங்கியது. வேகமாக நகர்ந்த அந்த லாரி, சாலையின் எதிர்புறம் இருந்த 3 கடைகளுக்குள் பயங்கர சத்தத்துடன் புகுந்து நின்றது.

பக்தர்கள் உயிர் தப்பினர்

விபத்து நடந்த சமயத்தில், அந்த கடைகளின் அருகே சபரிமலைக்குச் செல்ல வந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் நின்றுகொண்டிருந்தனர். லாரி கட்டுப்பாடின்றி வருவதைக் கண்டு அவர்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு, அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

3 கடைகள் சேதம்

இந்த விபத்தில் சாலையோரம் இருந்த 3 கடைகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்தன. விபத்து நடந்தவுடன் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. இச்சம்பவம் குறித்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள குமுளி போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com