தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரி; சாலையில் சிதறிய ஆப்பிள்களை போட்டிப் போட்டு அள்ளி சென்ற மக்கள்

சாலையில் சிதறிக் கிடந்த அத்தனை ஆப்பிள்களையும் பொதுமக்கள் சுமார் 15 நிமிடங்களில் அள்ளி சென்றுவிட்டனர்.
தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரி; சாலையில் சிதறிய ஆப்பிள்களை போட்டிப் போட்டு அள்ளி சென்ற மக்கள்
Published on

ஐதராபாத்,

தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து சிதறிய ஆப்பிள்களை மக்கள் போட்டிப் போட்டு பைகளில் அள்ளி சென்ற சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹபூபாபாத் மாவட்டத்தில் உள்ள மடேடு கிராமத்திற்கு அருகே, வாரங்கல்-கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் ஆப்பிள் பழங்கள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தால் லாரியில் இருந்த ஆப்பிள் பழங்கள் அனைத்து சாலையில் சிதறின.

இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் ஆப்பிள் பழங்களை எடுக்க ஆரம்பித்தனர். இந்த விபத்து குறித்த தகவல் அருகில் உள்ள கிராமத்திற்கு பரவிய நிலையில், அடுத்த ஒரு சில நிமிடங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அந்த இடத்தில் குவிந்தனர். அவர்கள் பிளாஸ்டிக் பைகளிலும், பெட்டிகளிலும் ஆப்பிள் பழங்களை போட்டிப் போட்டுக் கொண்டு அள்ளி சென்றனர்.

சுமார் 15 நிமிடங்களில் சாலையில் கிடந்த அத்தனை ஆப்பிள்களும் காலியாகிவிட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், கூட்டத்தை கலைத்து வாகனப் போக்குவரத்தை சீர்செய்தனர். பின்னர், கவிழ்ந்த லாரி சாலையில் இருந்து அகற்றப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com