

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் சஹத்வார் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா குமார் ராஜ்பார் (24) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக பலமுறை உறுதியளித்த கிருஷ்ணா குமார், அவருடன் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளார்.
நீண்ட கால நெருக்கத்தினால் பெண் கர்ப்பமானார். இந்தத் தகவலை தன் காதலன் கிருஷ்ணா குமாரிடம் கூறியபோது, தனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்றும், வேலை கிடைத்தவுடன் நிச்சயம் திருமணம் செய்து கொள்வதாகவும் அந்த பெண்ணிடம் உறுதியளித்துள்ளார்.
காதலனின் பொய் வாக்குறுதியை நம்பிய காதலி. அவன் கொடுத்த கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண்ணின் உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், காதலன் மீதான நம்பிக்கையில் அவர் அமைதி காத்துள்ளார். சமீபத்தில் கிருஷ்ணா குமாருக்கு இந்தியக் கடற்படையில் வேலை கிடைத்தது. இந்த மகிழ்ச்சியில் இருந்த அந்தப் பெண், இப்போது தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கிருஷ்ணாவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்ய முடியாது என்று துரோகம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கிருஷ்ணாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்ணைக் கடுமையாகத் திட்டி, மீண்டும் வந்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் பாலியா கோட்வாலி காவல் நிலையத்திற்கு சென்று கிருஷ்ணா குமார் மீது புகார் அளித்தார்.
காதலனின் மீது பாலியல் வன்கொடுமை, மோசடி மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சஹத்வார் பகுதியில் பதுங்கியிருந்த கிருஷ்ணா குமார் ராஜ்பாரை போலீசார் கைது செய்தனர். தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.