‘மேற்கு வங்கத்தில் தயாரிக்கப்படும் எல்.பி.ஜி. சிலிண்டர்களை வெளி மாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது’ - மம்தா பானர்ஜி

மத்திய அரசு எரிபொருள் விலையை உயர்த்திவிட்டு, மிகச் சிறிய அளவில் வரிகளை குறைக்கிறது என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
‘மேற்கு வங்கத்தில் தயாரிக்கப்படும் எல்.பி.ஜி. சிலிண்டர்களை வெளி மாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது’ - மம்தா பானர்ஜி
Published on

கொல்கத்தா,

மத்திய கிழக்கில் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி மறுத்து உள்ளது. இதனால் வணிக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில் வணிக சிலிண்டர் விநியோகத்திற்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மார்ச் 12-13 ஆகிய தேதிகளில் மாநில தலைமை செயலகத்தில் எண்ணெய் விநியோக நிறுவனங்கள் மற்றும் எரிவாயு விநியோகஸ்தர்களுடன் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மேலும், மேற்கு வங்கத்தில் எரிவாயு இருப்பைக் கண்காணிக்கவும், விநியோக தடைகளைத் தீர்க்கவும் 24 மணி நேர எல்.பி.ஜி. கட்டுப்பாட்டு அறையை மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.

இதற்கிடையில், உயர்ந்து வரும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை சமாளிக்க எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.10 குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதன் பலன் நுகர்வோருக்குக் கிடைக்குமா என்று மம்தா பானர்ஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

“மத்திய அரசு எரிபொருள் விலையை அபாயகரமான அளவிற்கு உயர்த்திவிட்டு, இப்போது மிகச் சிறிய அளவில் வரிகளை குறைக்கிறது. அந்த பலன் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

பெட்ரோல் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் இரண்டுமே போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. ஆனால், மேறு வங்க மாநிலத்தின் காவல் கண்காணிப்பாளர்களும், மாவட்ட கலெக்டர்களும் தேர்தல் ஆணையத்தால் நீக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், மேற்கு வங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயு சிலிண்டர்களை வெளி மாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது.

மாநிலத்திற்கு வெளியிலிருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்தல் பணிக்காக இங்கு பணியமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு எல்.பி.ஜி. இணைப்புகள் வழங்க வேண்டியிருக்கும். ஆனால், அது சாதாரண குடிமக்களுக்கு சிலிண்டர் விநியோகத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடக் கூடாது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com