கோரக்பூர், பூல்பூர் மக்களவை இடைத்தேர்தல்: சமாஜ்வாடி கட்சி முன்னிலை; தொண்டர்கள் கொண்டாட்டம்

உத்தர பிரதேசத்தில் கோரக்பூர் மற்றும் பூல்பூர் மக்களவை இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. #LokSabhaBypolls
கோரக்பூர், பூல்பூர் மக்களவை இடைத்தேர்தல்: சமாஜ்வாடி கட்சி முன்னிலை; தொண்டர்கள் கொண்டாட்டம்
Published on

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத் மற்றும் பூல்பூர் தொகுதியில் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் பதவி விலகினர். யோகி உத்தர பிரதேச முதல் அமைச்சராகவும் மற்றும் கேசவ் துணை முதல் அமைச்சராகவும் பதவி ஏற்றனர்.

இதனை தொடர்ந்து கோரக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 11ந்தேதி நடந்து முடிந்தது. கோரக்பூரில் 47.45 சதவீதமும், பூல்பூரில் 37.39 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

இந்த இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கோரக்பூர், பூல்பூர் மக்களவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இதில், தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் பாரதீய ஜனதா முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் சமாஜ்வாடி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

கோரக்பூரில் 6வது சுற்று முடிவில், சமாஜ்வாடியின் வேட்பாளர் பிரவீன் குமார் 89,950 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். பாரதீய ஜனதாவின் உபேந்திரா தத் சுக்லா 82,811 வாக்குகளுடன் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

இதேபோன்று பூல்பூரில் சமாஜ்வாடியின் வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் பட்டேல் 1 லட்சத்து 22 ஆயிரத்து 247 வாக்குகளை பெற்று 15 ஆயிரத்து 713 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். பாரதீய ஜனதாவின் கவுசலேந்திரா சிங் பட்டேல் 1 லட்சத்து 6 ஆயிரத்து 534 வாக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.

இரு மக்களைவை தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ள நிலையில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com