செபி தலைவர் பிரபல வங்கியில் ரூ.16 கோடி சம்பளம் வாங்கியது ஏன்..? - காங்கிரஸ் கேள்வி

தனியார் வங்கியிடம் சம்பளமாக ரூ.16 கோடி பணம் வாங்கியதாக செபி தலைவர் மாதவி புரி புச் மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
செபி தலைவர் பிரபல வங்கியில் ரூ.16 கோடி சம்பளம் வாங்கியது ஏன்..? - காங்கிரஸ் கேள்வி
Published on

புதுடெல்லி,

கடந்தாண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கிய அதானி குழுமம், பலநூறு கோடி ரூபாய் ரகசிய பரிவர்த்தனையில் ஈடுபட்டு பங்குச்சந்தையில் ஊழல் செய்ததாக ஆதாரங்களை வெளியிட்டது. மேலும் அதானியின் போலி நிறுவனம் என்று குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் செபியின் தலைவராக இருக்கும் மாதவிக்கும் அவரது கணவருக்கும் பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கட்டுரை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தும் செபி தலைவராக இருக்கும் மாதபி புரி புச், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியிடம் இருந்து ரூ.16.8 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் பவன் கேரா, "பங்குச்சந்தையில் நாம் முதலீடு செய்யும் பணத்தை ஒழுங்குப்படுத்துவதே செபியின் வேலை. இது முதலீடு விஷயத்தில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், நமது நாட்டில் சதுரங்க ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு பகுதியான மாதவி புரி பச் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.

மாதவி புரி புச் ஏப்ரல் 5, 2017 முதல் அக்டோபர் 4, 2021 வரை செபியின் நிரந்தர உறுப்பினராக இருந்தார். பின்னர், மார்ச் 22,2022 முதல் செபியின் தலைவராக நியமிக்கப்பட்டார். செபியின் தலைவரை நியமிக்கும் குழுவில் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித் ஷாவம் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், மாதவி புரி புச் செபியின் முழுநேர ஊழியராக இருந்தபோது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து கடந்த 2017 முதல் 2024 வரை வழக்கமான சம்பளமாக ரூ. 16.80 கோடி வரை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து ஐ.சி.ஐ.சி.ஐ .புருடென்ஷியல், பணியாளர் பங்கு உரிமைத் திட்டம் (ESOP) அதற்கான வரிவிலக்கு ஆகியவற்றையும் பெற்று வந்துள்ளார். செபியின் முழுநேர உறுப்பினராக இருந்த நீங்கள் எதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்றீர்கள் என்று அறிய விரும்புகிறோம். இது செபியின் விதிகளில் பிரிவு 54 -ஐ மீறுவதாகும். எனவே, செபி தலைவர் மாதவி புரி புச் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்" என்று அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com