போலீசாரை மிரட்டி போலீஸ் வாகனத்தில் மாணவியை கடத்தி சென்ற கும்பல்

அவசர போலீசுக்கு போன் செய்து அவர்களை மிரட்டி போலீஸ் வாகனத்தில் மாணவியை ஒரு கும்பல் கடத்தி சென்றது. #MadhyaPradesh
போலீசாரை மிரட்டி போலீஸ் வாகனத்தில் மாணவியை கடத்தி சென்ற கும்பல்
Published on

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் சினிமா பாணியில் போலீஸ் வாகனத்தில் மாணவியை ஒரு கும்பல் கடத்தி சென்றது.

மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் பமோரி என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள ஒரு கும்பல் போலீசுக்கு 100 நம்பரில் போன் செய்து அவசரமாக வருமாறு கூறியது. இதை அறியாத போலீசார் இரவு 11.30 மணிக்கு அந்த கிராமத்துக்கு சென்றனர்.

அப்போது ஒருவன் மயங்கியபடி நடித்தான். போலீசார் அவனை பார்க்க சென்ற போது மற்றவர்கள் மறைந்து இருந்து போலீசாரை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் மிரட்டினர். 3 போலீசாரையும் மிரட்டி அவர்கள் வந்த வேனை பறித்து சென்றனர்.

கடத்தப்பட்ட போலீஸ் வேனுடன் அந்த கும்பல் அதே கிராமத்தில் உள்ள ராஜ்குமார் படேல் என்பவர் வீட்டுக்கு சென்றது. நள்ளிரவில் அந்த வீட்டு கதவை தட்டி போலீஸ் விசாரணைக்கு வந்து இருப்பதாக கூறி அந்த கும்பல் அவரது மகள் நிரஜாலாவை (வயது 20) கடத்தி சென்றது. அவர் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.

மாணவி கடத்தப்பட்ட சம்பவம் மறுநாள் பிற்பகலில் தான் தெரியவந்தது. போலீஸ் வேனை பறித்து மாணவியை கடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவி எதற்காக கடத்தப் பட்டார் என்ற விவரம் தெரியவில்லை.

அந்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். அந்த கும்பல் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. ஆனால் அவர்களது பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com