மத்திய பிரதேசம்: 2 மகன்களை கொன்றுவிட்டு அரசு அதிகாரி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை

தனது 2 மகன்களையும் காரில் அழைத்துக் கொண்டு திரைப்படம் பார்க்க சென்ற அஜய், பின்னர் வீடு திரும்பவில்லை.
மத்திய பிரதேசம்: 2 மகன்களை கொன்றுவிட்டு அரசு அதிகாரி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை
Published on: 

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் ராய்சன் மாவட்டம் உதய்புரா அருகே பரேலி தாலுகா அலிகஞ்ச் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் தாக்கட். இவர் உதய் புராவில் அரசு வருவாய் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி சிவம் (வயது 14), சரத்(11) என 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முறையே 9-ம் வகுப்பும், 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

அஜய்யை விட்டு அவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். இவர்களுடன் அஜய் தாக்கட்டின் மாமனார் பிரதாப்சிங் தாக்கட் என்பவரும் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அஜய் தாக்கட், தனது 2 மகன்களையும் காரில் அழைத்துக் கொண்டு திரைப்படம் பார்க்க சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் ராய்சன் மாவட்டத்தில் உள்ள பிபாரியா ரெயில் நிலையத்துக்கு சென்றார். அங்கு ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் தனது காரை நிறுத்திய அஜய், பின்னர் ரெயில் நிலையத்துக்குள் சென்றார். அங்கு வந்த சங்கமித்ரா ரெயில் முன்பு திடீரென அஜய் பாய்ந்தார். இதில் ரெயில் அவர் மீது பயங்கரமாக மோதியது.

இதனால் அஜய், உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அவரது உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். மேலும் அவரது காரையும் சோதனை செய்தனர். அப்போது காரில் போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் அவருடைய 2 மகன்களின் உடல்களும் இருந்தன.

அஜய், தனது 2 மகன்களையும் கழுத்தை நெரித்து கொன்று காரில் உடல்களை வைத்துவிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தனது மகன்களையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.

ரெயில்வே போலீசார் அஜய் மற்றும் அவரது மகன்கள், சிவம், சரத் ஆகிய 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பிபாரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி பிபாரியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com