இஸ்லாமிய மதத்துக்கு மாற மறுத்ததால் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை

ரத்த வெள்ளத்தில் சரிந்த பாக்கியஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் ரவனரா என்ற பகுதியில் வசித்து வருபவர் ஷேக்ரையீஸ். 42 வயதாகும் இவர் அதே பகுதியில் வசித்து வந்த பாக்கியஸ்ரீ என்ற 35 வயது பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலை பாக்கியஸ்ரீ ஏற்கவில்லை.
இருப்பினும் அடிக்கடி பாக்கியஸ்ரீயிடம் ஷேக்ரையீஸ் தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தொல்லை கொடுத்து வந்தார். அதோடு தன்னை திருமணம் செய்வதற்காக இஸ்லாமிய மதத்துக்கு மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு பாக்கியஸ்ரீ மறுப்பு தெரிவித்து ஷேக்ரையீசை தவிர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடும் கோபத்தில் இருந்த ஷேக்ரையீஸ் நேற்று இரவு பாக்கியஸ்ரீ வீட்டுக்குள் புகுந்து அவரிடம் மீண்டும் மத மாற வலியுறுத்தினார். இதை பாக்கியஸ்ரீ ஏற்காததால் அவரது தலைமுடியைப் பிடித்து கீழே தள்ளி அடித்து உதைத்துள்ளார். ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற ரையீஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாக்கியஸ்ரீயின் கழுத்தை அறுத்தார். மேலும் சரமாரியாக வயிற்றில் சுத்தியால் குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாக்கியஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து ஷேக்ரையீஸ் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பாக்கியஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ஷேக்ரையீசை வலைவீசி தேடி வந்த நிலையில், அதே பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






