மூன்றாவதும் ஆண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்: கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தந்தை

பெண் குழந்தை பிறக்க வேண்டுமென அவர் எதிர்பார்த்த நிலையில் மீண்டும் ஆண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

போபால்,

மத்திய பிரதேசத்தில் மூன்றாவதும் ஆண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்த தந்தை பிறந்து 12 நாட்களே ஆன குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதர் காவல் நிலையத்திற்குட்பட்ட பஜர்வாடாவில் வசித்து வருபவர் அனில் உய்கே. இவரது மனைவி ருச்சிகா. இவருக்கு 7 மற்றும் 5 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது மகன் பிறந்த பிறகு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படி உய்கே, தனது மனைவி ருச்சிகாவிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் செய்யவில்லை.

அவரது மனைவி மீண்டும் கர்ப்பமான நிலையில் பெண் குழந்தை பிறக்க வேண்டுமென உய்கே எதிர்பார்த்துள்ளார். ஆனால் மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் உய்கே அவரது மனைவியுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை போதையில் இருந்த உய்கே ருச்சிகாவுடன் சண்டையிட்டு அவரை அடித்துள்ளார். அடி தாங்க முடியாத, ருச்சிகா சண்டையை தவிர்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

இந்த நிலையில் உய்கே, பிறந்து 12 நாட்களே ஆன தனது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். புகாரின் அடிப்படையில் அவர் மீது பிரிவு 302-ன் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com