

போபால்,
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பிறந்து 16 மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இது இயற்கை மரணம் என்று கருதப்பட்ட நிலையில், குழந்தையின் கழுத்தில் இருந்த காயங்களை மருத்துவர்கள் கண்டறிந்ததை அடுத்து, இது ஒரு திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சண்டேரி பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு, கடந்த 2-ந்தேதி அன்று இரவு 11:50 மணியளவில் அசோக் நகர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு, குழந்தை உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
மறுநாள் 3-ந்தேதி அன்று மாலை 3 முதல் 4 மணிக்குள், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தை திடீரென சுயநினைவின்றி இருப்பதை ஆஸ்பத்திரி ஊழியர்கள் கவனித்தனர். உடனடியாக அங்கு வந்த மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதித்தபோது, அந்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், குழந்தையின் உடலை உற்று நோக்கிய மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையின் வாயில் இருந்து ரத்தம் கசிந்திருந்ததுடன், கழுத்தைச் சுற்றிலும் மிகக் கொடூரமாக அழுத்தி நெரித்ததற்கான காயங்கள் மற்றும் நகக் கீறல்கள் இருந்தன. யாரோ ஒருவரால் குழந்தை மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்பதை உணர்ந்த ஆஸ்பத்திரி நிர்வாகம், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தது.
தகவலறிந்து வந்த கோட்வாலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த தீவிர சிகிச்சை பிரிவில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. இருப்பினும், அந்தப் பிரிவுக்குள் நுழைய குழந்தையின் தாய் மற்றும் பாட்டிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால், அவர்கள் 2 பேர் மீதும் போலீசாருக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
விசாரணையில், அந்தக் குடும்பத்திற்கு ஏற்கனவே பெண் குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டதே என்ற விரக்தியில், குடும்பத்தினரே இக்கொடூரச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். 16 மணி நேரம் மட்டுமே வாழ்ந்த ஒரு பச்சிளம் குழந்தை, ஆஸ்பத்திரியிலேயே கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.