மத்திய பிரதேசம்: மருத்துவமனையில் எலி கடித்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தை பலி

மத்திய பிரதேச மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்புக்கு எலி கடித்தது காரணம் இல்லை என மருத்துவர் அசோக் யாதவ் கூறினார்.
இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் மகராஜா யஷ்வந்த்ராவ் என்ற பெயரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் மிக பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான இதில், சிகிச்சைக்காக 2 குழந்தைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. அவற்றை எலிகள் கடித்து விட்டன என குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி அந்த மருத்துவமனையின் சூப்பிரெண்டான டாக்டர் அசோக் யாதவ் கூறும்போது, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள குழந்தை ஒன்றின் விரல்களையும், மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள் பகுதியையும் எலிகள் கடித்து உள்ளன என்றார்.
அவை இரண்டும் புதிதாக பிறந்த குழந்தைகள் ஆகும். அவற்றில் ஒரு குழந்தை கார்கோன் மாவட்டத்தில் யாருமற்ற நிலையில் கைவிடப்பட்டு கிடந்துள்ளது. அதனை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றார்.
இந்த சம்பவங்கள் பற்றி விசாரிக்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது என அவர் கூறினார்.
இந்தநிலையில், மத்திய பிரதேசம் மருத்துவமனையில் எலி கடித்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தை பலியாகி உள்ளது. மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி மருத்துவரான அசோக் யாதவ் கூறும்போது, குழந்தை உயிரிழப்புக்கு எலி கடித்தது காரணம் இல்லை. 1.2 கிலோ எடை கொண்ட, பிறந்து 3 நாளே ஆன அந்த பெண் குழந்தை கடுமையான இருதய பாதிப்புடன் இருந்தது. அதனுடைய பெற்றோர் அதனை கைவிட்டு விட்டு சென்றுள்ளனர். போலீசாரிடம் இந்த தகவலை தெரிவித்து விட்டோம் என்றார்.
இந்த சம்பவத்தில், பணியாளர்கள் 2 பேரை மருத்துவமனை நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது. பல்வேறு அதிகாரிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்து வரும் நிலையில், இந்த சம்பவம் பற்றி நீதிமன்ற விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.






