ஆன்லைனில் மது விற்பனை: மத்தியப் பிரதேச அரசு புதிய திட்டம் - பா.ஜனதா கண்டனம்

ஆன்லைனில் மது விற்பனை செய்யும் மத்தியப் பிரதேச அரசின் புதிய திட்டத்திற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் மது விற்பனை: மத்தியப் பிரதேச அரசு புதிய திட்டம் - பா.ஜனதா கண்டனம்
Published on

போபால்,

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்-மந்திரியாக கமல்நாத் இருந்து வருகிறார். 2020-21ம் ஆண்டுக்கான மதுக்கொள்கையில் திருத்தம் செய்து அம்மாநில அரசு அறிக்கை வெளியிட்டது.

அந்த திட்டத்தின் மூலம் ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படும் என்றும், அதில் வெளிநாட்டு மதுபானங்கள் மட்டுமே விற்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இப்போது, மத்தியப் பிரதேசத்தில் 2544 உள்நாட்டு மதுபான கடைகளும், 1061 வெளிநாட்டு மதுபான கடைகளும் உள்ள நிலையில் இனிமேல் வெளிநாட்டு மதுபானங்கள் அனைத்தும் ஆன்லைனில் விற்கப்படும். இணைய தளங்களில் மது விற்பனைக்குக் கட்டுப்பாடு கொண்டு வர ஒவ்வொரு மது பாட்டிலிலும் பார்கோட் ரீடர் ஓட்டப்படும் என்றும், இதனால் கடந்த ஆண்டை விட மது விற்பனை 25% அதிகம் ஆக விற்பனை ஆகும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், திராட்சை சாகுபடியை ஊக்குவித்து அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காகவும், திராட்சைகளில் இருந்து தயாரிக்கப்படும் வைன் மதுவை ஊக்குவிப்பதற்காகவும் சுற்றுலா இடங்களில் 15 புதிய விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பா.ஜனதா மாநில துணைத்தலைவர் ராமேஷ்வர் சர்மா கூறுகையில், உங்கள் வீட்டு வாசலில் இனிமேல் மது கிடைக்க கமல்நாத் அரசு உதவும். மத்தியப் பிரதேசத்தை மதுவில் திளைக்கும் மாநிலமாக மாற்றி, எதிர்காலச் சந்ததியினரை இருளில் தள்ளப்போகிறது. இதன் மூலம் அரசின் நோக்கம் தெளிவாகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார்

இதேபோல் இந்தூர் பா.ஜனதா எம்.எல்.ஏ. ரமேஷ் மென்டோலா தனது டுவிட்டரில், ஆன்லைனில் மது விற்க காங்கிரஸ் அரசு முடிவு செய்துவிட்டது. இத்தாலி மக்கள் சிலருக்காக, மத்தியப் பிரதேசத்தை இத்தாலியாக மாற்ற முயல்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com