

போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில், காட்டுப்பன்றிகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டை 'ரசகுல்லா' இனிப்பு என நினைத்து வாயில் வைத்து கடித்த 35 வயது இளைஞர், வாய் மற்றும் முகம் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டம் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படாரியா சாந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பரோடியா (வயது 35). இவர் கடந்த 8-ம் தேதி தீபாவளி பண்டிகை அன்று இரவு 8 மணி அளவில், தனது வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.
அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ராம் பகத் பாருடியா என்பவர் ராஜேந்திராவிடம் நாட்டு வெடிகுண்டை 'ரசகுல்லா' என்று கூறி கொடுத்துள்ளார். இரவு நேர இருட்டில் அதை 'ரசகுல்லா' இனிப்பு என்று நினைத்த ராஜேந்திரா, வாங்கி வாயில் போட்டுக் கடித்துள்ளார். ஆனால், அது காட்டுப்பன்றிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த நாட்டு வெடிகுண்டு என்பதால், கடித்த அடுத்த நொடியே பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ராஜேந்திராவின் வாய் மற்றும் முகம் சிதறியது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கோட்வாலி போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ராம் பகத்தின் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.