மகா கும்பமேளா: 4-வது நாளில் சுமார் 30 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்

மகா கும்பமேளாவின் 4-வது நாளான இன்று சுமார் 30 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
மகா கும்பமேளா: 4-வது நாளில் சுமார் 30 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்
Published on

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை சுமார் 7 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். கடந்த 14-ந்தேதி மகர சங்கராந்தி தினத்தில் சுமார் 3 கோடியே 50 லட்சம் பேர் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில், மகா கும்பமேளாவின் 4-வது நாளான இன்று சுமார் 30 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com