

கட்சிரோலி,
மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல் நிறைந்த கட்சிரோலி மாவட்டத்தில் ஆரேவாடா பஞ்சாயத்து அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்று காலை இங்கு மூவர்ண கொடியேற்ற பஞ்சாயத்து தலைவர் உள்பட சிலர் சென்று உள்ளனர்.
ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே கொடி கம்பத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை மாவோயிஸ்டுகள் ஏற்றி இருக்க கூடும் என அவர்கள் அச்சமடைந்து உள்ளனர். இதனால் கருப்பு கொடியை அவர்கள் இறக்கவில்லை.
இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கூறி அலுவலகத்தின் வெளியே பேனர் ஒன்றும் வைக்கப்பட்டு உள்ளது.
அதன்பின் சற்று தொலைவில் உள்ள மற்றொரு கம்பத்தில் மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. இதுபற்றி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின்னால் மாவோயிஸ்டுகள் இருக்க கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த கருப்பு கொடியை இறக்குங்கள் என பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் பொது மக்களிடம் போலீசார் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கொடியை இறக்கினார்களா? அல்லது இல்லையா? என தொலைதொடர்பு வசதி குறைவால் தெரியவில்லை என போலீசார் தெரிவித்து விட்டனர்.