

மும்பை,
தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டினார். இது இந்தி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த பரபரப்பான நிலையில் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நானா படேகர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இப்போது தனுஸ்ரீ தத்தாவின் புகாரை கவனத்தில் எடுத்துக்கொண்ட மராட்டிய மாநில பெண்கள் ஆண்டையம் நானே படேகர், தயாரிப்பாளர் சமி சித்திக், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மற்றும் இயக்குனர் ராகேஷ் சாரங்கிற்கு நோட்டீஸ் விடுத்துள்ளது. தனுஸ்ரீ தத்தா குறிப்பிட்டவர்களுக்கு எதிராக நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் தொடர்பாக 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே தனுஸ்ரீ தத்தாவின் புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை தெரிவியுங்கள் என மும்பை போலீசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.