மராட்டியம்: ரெயிலில் இருந்து தவறி விழுந்து 5 பயணிகள் உயிரிழப்பு

ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக 10 பேர் முதல் 12 பேர் வரை தவறி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை,
மராட்டிய தலைநகர் மும்பையில் புறநகர் மின்சார ரெயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். அதிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் திருவிழா கூட்டம் போல ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவு காணப்படும்.
இந்த நிலையில், இன்று காலை தானே ரயில் நிலையத்தில் இருந்து மும்பை ரயில் நிலையத்துக்கு புறநகர் ரெயில் சென்றுகொண்டிருந்தது.அதிக கூட்டம் காரணமாக ரெயிலில் படிக்கட்டுகளில் அதிகளவிலான பயணிகள் தொங்கியபடி பயணித்துள்ளனர்.
தானேவை அடுத்த மும்ப்ரா ரெயில் நிலையம் அருகே புறநகர் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, படிக்கட்டுகளில் தொங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்துள்ளனர்.அதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், காயமடைந்தவர்களை ரெயில்வே காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுதொடர்பாக மும்பை ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தானே - மும்பை புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது






