

மும்பை,
மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் வழக்கு, அந்த காரின் உரிமையாளர் ஹிரேன் மன்சுக் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசே கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து நடந்த விசாரணையில் சச்சின் வாசே தொடங்கிய நிறுவன வங்கி கணக்கில் ரூ.1 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் சமீபத்தில் கூட்டாளி ஒருவரிடம் ரூ.76 லட்சம் கொடுத்ததும் தெரியவந்தது. இதேபோல அவரிடம் இருந்து பல விலை உயர்ந்த சொகுசு கார்களையும் என்.ஐ.ஏ.பறிமுதல் செய்து இருந்தது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் சச்சின் வாசே வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகார்கள் குறித்து மாநில லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையை தொடங்கி உள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை டி.ஜி. உத்தரவை அடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சச்சின் வாசேயின் அசையும், அசையா சொத்துக்கள் விவரம், அந்த சொத்துக்களை அவர் எப்படி வாங்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார்.