

மராட்டியத்தில் நீண்ட கால நட்பு கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை இணைந்தே சந்தித்தன.
பிரதமருடன் சந்திப்பு
தேர்தலில் வெற்றி கனியை பறிந்த அந்த கட்சிகளுக்கு இடையே முதல்-மந்திரி பதவியை பங்கிட்டு கொள்வதில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா கொள்கை மாறுபாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் கைகோர்த்து ஆட்சி அமைத்தது.இந்தநிலையில் சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை, கூட்டணி கட்சி தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே சந்திக்க சென்றார். அப்போது மோடி, உத்தவ் தாக்கரேயை தனியாக அழைத்து பேசியது மராட்டிய அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி மீண்டும் உருவாக போவதாக தகவல்கள் பரவின.
பட்னாவிஸ் கருத்து
இதற்கிடையே சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற மத்திய முகமைகளின் நெருக்கடிகளுக்கு சிவசேனா தலைவாகள் ஆளாகாமல் இருக்க மீண்டும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார்.கடந்த சில தினங்களுக்கு முன் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சிவசேனாவும், பா.ஜனதாவும் எதிரிகள் கிடையாது, கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
உத்தவ் தாக்கரே மறுப்பு
எனினும் சிவசேனா-பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஏற்படும் என்று பரவி வரும் தகவல் குறித்து முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே எதுவும் பேசாமல் இருந்தார். அவர் நேற்று இந்த விவகாரத்தில் மவுனம் கலைத்தார். சிவசேனா, பா.ஜனதா கூட்டணி மீண்டும் அமையபோவதாக வெளியாகி உள்ள தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.2 நாள் சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து அவர் துணை முதல்-மந்திரி அஜித்பவார்(தேசியவாத காங்கிரஸ்), மந்திரி பாலசாகேப் தோரட்(காங்கிரஸ்) ஆகியோருடன் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது கேட்ட கேள்விக்கு உத்தவ் தாக்கரே பதிலளித்து கூறியதாவது:-
30 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை
இந்த நேரத்திலும் கூட நான் பாலசாகேப் தோரட், துணை முதல்-மந்திரி அஜித்பவார் ஆகியோருடன் தான் இருக்கிறேன். இவர்கள் என்னை விடுவார்களா?. நான் எங்கும் போகப்போவது இல்லை. நாங்கள்(பா.ஜனதா-சிவசேனா) 30 ஆண்டுகளாக ஒன்றாக இருந்தபோது எதுவும் நடக்கவில்லை. இப்போதும் ஒன்றும் நடந்து விட போவதில்லை. எனவே பா.ஜனதாவுடன் சிவசேனா மீண்டும் கூட்டணி அமைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதாவுக்கு கண்டனம்
இதேபோல முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் அறையில் அத்துமீறிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தா.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் செயல் எங்களை அவமானத்தில் தலையை சுவரில் முட்டிக்கொள்ள வைத்து உள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு தரவேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் பா.ஜனதா ஏன் ரகளையில் ஈடுபட்டு கூச்சல் இடவேண்டும். அந்த தகவல் இருந்தால் தான், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஆணையம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் குறித்த உரிய புள்ளி விவரங்களை தயாரிக்க முடியும். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க நீங்கள் எதிராக உள்ளீர்கள் என நாங்கள் இதை கூறலாமா?.
ஒருவேளை இந்த தீர்மானத்தால் எதுவும் நடக்கப்போவதில்லை என்றாலும், அதற்கு நீங்கள் ஆதரவு தரலாமே?. ரகளையில் ஈடுபட வேண்டிய அவசியம் என்ன?. மத்திய அரசு தேவையான தகவல்களை தராதபோது, அதில் தவறுகள் இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும்?. ஒருவேளை அதில் தவறுகள் இருந்தால், அதுகுறித்து 2019-ம் ஆண்டு தேவேந்திர பட்னாவிஸ் அரசு ஏன் தகவல் கேட்கவில்லை?.
அரசை கவிழ்க்கும் முயற்சி தேல்வி
திங்கட்கிழமை நடந்த சம்பவம் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி ஆகும். ஆனால் அது தோல்வியில் முடிந்துவிட்டது. இதற்கு முன்பும் பல முறை அவர்கள் அந்த முயற்சியில் தோல்வி அடைந்து உள்ளனர். நாங்கள் ஜனநாயகத்தை கொலை செய்ததாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டுகின்றனர். எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது கருப்பு அத்தியாயம் என கூறுகின்றனர். அப்படி என்றால் அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் என்ன செய்கிறார்கள்?. ஜனநாயகத்தின் மீது வெள்ளை சாயம் பூசி கொண்டு இருக்கிறார்களா?.
இவ்வாறு அவர் கூறினார்.