மராட்டிய மாநில முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சேவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி

அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் இது குறித்து கவலைப்பட தேவை இல்லை என்றும் சுப்ரியா சுலே எம்.பி. தெரிவித்துள்ளார்
Image Courtacy: ANI
Image Courtacy: ANI
Published on

மும்பை,

முன்னாள் மந்திரியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மேல்-சபை உறுப்பினருமான ஏக்நாத் கட்சே மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே எம்.பி. தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று கூறினார்.

மேலும் அவர் ஏக்நாத் கட்சே மகளும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவருமான ரோகினி கட்சே உடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் ரோகினி கட்சே வெளியிட்டிருந்த வலைதள பதிவில், "கடந்த 2 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், எனது தந்தை ஏக்நாத் கட்சே ஜல்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இது குறித்து கவலைப்பட எந்த தேவையும் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் கட்சே அந்த கட்சியில் இருந்து விலகி கடந்த 2020-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு மேல்-சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com