மராட்டிய சட்டசபை ஜூலை 5, 6ஆம் தேதிகளில் கூடுகிறது

ஜூலை 5, 6ஆம் தேதிகளில் மராட்டிய சட்டசபை கூடுகிறது. 2 நாட்கள் மட்டுமே கூட்டம் நடைபெறுவதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்து.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா, ஓயாத அலையாக நீடிக்கிறது. இதன் காரணமாக மராட்டிய சட்டசபை கூட்டங்கள் சுருக்கமாக சில நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நீண்ட நாட்களாக சட்டசபை கூட்டம் நடைபெறாத நிலையில், மழைக்கால கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பாக நேற்று சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூட்டம் விதான் பவனில் நடைபெற்றது.

இதில் மராட்டிய மேல்-சபை தலைவர் ராம்ராஜே நிம்பல்கர், துணைதலைவர் நீலம் கோரே, துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, துணை முதல்-மந்திரி அஜித்பவார், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவீன் தரேகர், சட்டசபை விவகார மந்திரி அனில் பரப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மழைக்கால கூட்டத் தொடரை கொரோனா பரவல் காரணமாக 2 நாட்கள் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அடுத்த மாதம் (ஜூலை) 5, 6-ந் தேதிகளில் சட்டசபை கூட்டம் நடைபெறும்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் எம்.எம்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்த போதிலும் பரிசோதனைக்கான நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம். எனவே விதான் பவனில் ஜூலை 3 மற்றும் 4-ம் தேதிகளில் ஆர்.டி-பி.சி.ஆர். கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மந்திரிகளுடன் சட்டமன்ற வளாகத்திற்கு உதவியாளர் ஒருவர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ.க்களுக்கு கையுறை, சானிடைசர், முககவசம், முக ஷீல்டு ஆகியவை வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com