விவசாயிகள் போராட்டம் மத்திய அரசுக்கு ஆதரவாக பிரபலங்கள் கருத்து : பா.ஜனதா அழுத்தம் கொடுத்ததா மராட்டிய அரசு விசாரணை

விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக பிரபலங்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்தது குறித்து மராட்டிய மாநில அரசு விசாரணை மேற்கொள்கிறது.
விவசாயிகள் போராட்டம் மத்திய அரசுக்கு ஆதரவாக பிரபலங்கள் கருத்து : பா.ஜனதா அழுத்தம் கொடுத்ததா மராட்டிய அரசு விசாரணை
Published on

மும்பை

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பாப் பாடகி ரெஹானா குரல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறவினர் மீனா ஹாரிஸ்,நடிகை மியா கலிஃபா, உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.

விவசாயிகளின் போராட்டங்களை ஆதரிக்கும் வெளிநாட்டு பிரபலங்களை பொறுப்புடன் டுவீட் செய்யுங்கள் என இந்தியா கூறி இருந்தது.

சர்வதேச பிரபலங்களுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு ஆதரவாகவும் பாரத ரத்னா விருந்து பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மற்றும் பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோர் கருத்து வெளியிட்டனர்.

இது பலராலும் விமர்சிக்கப்பட்டது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கிரிக்கெட் துறையை சார்ந்தவர்கள் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார். மற்ற துறைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று நான் சச்சினுக்கு பரிந்துரைக்கிறேன்" என்று பவார் கூறினார்.

மராட்டிய நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பவார் சொன்னதை மீண்டும் வலியுறுத்தினார். "அரசாங்கம் இந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது. லதா மங்கேஷ்கர், சச்சின் தெண்டுல்கர் பெரியவர்கள், ஆனால் மிகவும் எளிமையானவர்கள். டுவீட் செய்ய அரசாங்கம் கேட்டதன் காரணமாக அவர்கள் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது" என்று அவர் கூறினார்.

மத்திய அரசுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பிரபலங்கள் கருத்து வெளியிட பா.ஜனதா அழுத்தம் கொடுத்ததா என்பதை அறிய டுவீட் குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கோர்க்கை வைத்தது.

மராட்டிய மாநில காங்கிரசின் பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான சச்சின் சாவந்த், மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தார்.

அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி, விளையாட்டு வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், சாய்னா நேவால் உள்ளிட்ட பிரபலங்களின் இந்த டுவீட்டுகளுக்குப் பின்னால் பா. ஜனதா அழுத்தம் இருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ் கூறியதாக சாவந்த் கூறினார்.

நேவால் மற்றும் அக்ஷய் குமார் செய்த டுவீட்களின் உள்ளடக்கங்கள் ஒரே மாதிரியானவை, அதே நேரத்தில் ஷெட்டி ஒரு பாஜக தலைவரை குறிப்பிட்டார். பிரபலங்களுக்கும் ஆளும் கட்சித் தலைவர்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருந்தது என்பதை இது காட்டுகிறது.

சமூக ஊடகங்களில் இதுபோன்ற ஆதரவு தெரிவிப்பதற்காக இந்த தேசிய ஹீரோக்கள் மீது பா.ஜனாதாவின் அழுத்தம் இருந்ததா என்பது குறித்து விசாரிக்க வேண்டும். மேலும் இந்த பிரபலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டது.

அனில் தேஷ்முக் இதுகுறித்து விசாரணை நடத்த புலனாய்வுத் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அனில் தேஷ்முக் கூறும் போது டுவீட் ஒரே மாதிரியான உள்ளடக்கம் அனுப்பப்பட்டதா என்று எங்கள் மாநில புலனாய்வுத் துறை விசாரிக்கும். அனைத்து டுவீட்களின் நேரமும், அவை அனுப்பப்பட்ட ஒருங்கிணைந்த முறையும் இது திட்டமிடப்பட்டதை குறிக்கிறது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com