

புதுடெல்லி,
மராட்டியம், அரியானா ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமையகத்தில் தொண்டர்களிடையே பேசினார்.
அவர் பேசியதாவது:-
பொதுவாக, 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிகள் மாறும். ஆனால், மராட்டியம், அரியானா ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா மீண்டும் 5 ஆண்டுகள் ஆள்வதற்கு மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர்.
அந்த மாநிலங்களில் பா.ஜனதா மீதும், முதல்-மந்திரிகள் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த அளவுக்கு அவர்கள் தூய்மையான நிர்வாகத்தை அளித்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் கடுமையாக பாடுபடுவார்கள்.
கடந்த 2014-ம் ஆண்டு, தேவேந்திர பட்னாவிஸ், மனோகர்லால் கட்டார் ஆகியோர் மராட்டியம், அரியானா மாநிலங்களில் முதல்- மந்திரியாக பதவி ஏற்றபோது, அவர்களுக்கு நிர்வாக முன்அனுபவமே இருக்கவில்லை.
இருப்பினும், சிறப்பாக பணியாற்றி, மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர்.
குறிப்பாக, அரியானா மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு கிடைத்த ஆதரவு முன்எப்போதும் இல்லாதது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் 33 சதவீத ஓட்டுகளை பெற்ற பா.ஜனதா, தற்போது 36 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.
மராட்டியத்தை பொறுத்தவரை, அங்கு கடந்த 50 ஆண்டுகளில் எந்த முதல்-மந்திரியும் 5 ஆண்டு பதவியை முழுமை செய்தது இல்லை. தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்முறையாக அந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். மராட்டியம் போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களுக்கு ஸ்திரத்தன்மை அவசியம்.
பா.ஜனதா ஆளும் மாநிலங்கள் எல்லாம் மத்திய அரசின் திட்டங்களை சரியாக அமல்படுத்தின. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களோ, அந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றும் வேலையைத்தான் செய்தன. இவ்வாறு அவர் பேசினார்.