மராட்டிய உள்ளாட்சி தேர்தல்: முக்கிய பிரமுகர்கள் வாக்களித்தனர்; மந்தநிலையில் வாக்குப்பதிவு

முதல் தலைமுறை வாக்காளர்கள், வயது முதிர்ந்தோர், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்தனர்.
மராட்டிய உள்ளாட்சி தேர்தல்: முக்கிய பிரமுகர்கள் வாக்களித்தனர்; மந்தநிலையில் வாக்குப்பதிவு
Published on

மும்பை,

இந்தியாவின் பணக்கார மாநகராட்சி எனப்படும் பெருநகர மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது.

இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்து 29 மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த தேர்தலில், மொத்தமுள்ள 29 மாநகராட்சிகளிலும் 2 ஆயிரத்து 869 கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க 15 ஆயிரத்து 931 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களை தேர்ந்தெடுக்க 3 கோடியே 48 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். வாக்கு பதிவையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள், வயது முதிர்ந்தோர், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்தனர். நடிகர் அக்சய் குமார் காலையிலேயே சென்று வாக்கை செலுத்தினார். மத்திய மந்திரி பியூஷ் கோயல் குடும்பத்துடன் சென்று வாக்கு செலுத்தினார்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேஷ் போலே, சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.பி. சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜீஷன் சித்திக், சச்சின் தெண்டுல்கர், நடிகர் சுனில் ஷெட்டி, நடிகை டுவிங்கிள் கன்னா, பாடலாசிரியர் குல்சார், நடிகர் ஜுனைத் கான் உள்ளிட்டோரும் தங்களுடைய வாக்குகளை செலுத்தினர். முக்கிய பிரமுகர்கள் வாக்கு செலுத்தி வருகிறபோதும், மந்தநிலையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com