

புனே,
நாட்டில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலம் மராட்டியமாகும். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்தாலும் மும்பை உள்ளிட்ட இடங்களில் மீண்டும் தொற்று சற்று அதிகரித்து வருவது 3-வது அலை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தற்போது பண்டிகை காலம் என்பதால் அடுத்தடுத்து திருவிழாக்களும் வருகின்றன. 10 நாள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி வரும் 10-ந் தேதி தொடங்குகிறது.
இதனால் மக்கள் அதிகளவில் வெளியே செல்வதால் கொரோனா வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் துணை முதல்-மந்திரி அஜித் பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கேரளா மற்றும் மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டி மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக, கிராமப்புறங்களில் சிலர் தங்களாகவே விதிமுறைகளை தளர்த்திக்கொள்கின்றனர். அவர்கள் கொரோனா வைரசுக்கு பயப்படுவதில்லை. முக கவசத்தை பயன்படுத்துவதில்லை. சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. மேலும் அவர்கள் கொரோனா தொற்று முடிந்துவிட்டதாக கருதுகின்றனர். இது தொற்றுநோய் அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
இதன் காரணமாக 3-வது அலை ஏற்பட்டால் அனைத்தையும் இழுத்து மூடவேண்டிய மோசமான நிலைக்கு அரசையும், நிர்வாகங்களையும் மக்கள் தள்ளிவிட கூடாது. பள்ளிக்கூடங்களை மீண்டும் திறப்பது பற்றி சம்பந்தப்பட்ட நிபுணர்களுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என்றார்.