மராட்டிய மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் - சரத் பவார்


மராட்டிய மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் - சரத் பவார்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 7 Nov 2024 7:20 AM (Updated: 7 Nov 2024 7:44 AM)
t-max-icont-min-icon

மராட்டியம் மாற்றத்தை எதிர்பார்க்கிறது, மாற்று வழங்க மகா விகாஸ் அகாடி தீவிரமாக செயல்பட்டு வருவதாக சரத் பவார் தெரிவித்துள்ளார்.

நாக்பூர்,

மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் மராட்டிய மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ.) வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அந்த மாற்றத்தை மக்களுக்கு வழங்கும் என்று என்.சி.பி. (எஸ்.பி.) தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நாக்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "மராட்டிய மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புவதாக நாங்கள் உணர்கிறோம், அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்க நாங்கள் உழைக்க வேண்டும். அதற்காக தீவிரமாக உழைக்கிறோம், நானும் எங்களது கூட்டணியினரும் இன்று முதல் மராட்டியம் முழுவதும் உள்ள மக்களைச் சென்றடைய உள்ளோம்" என்று கூறினார்.

நேற்று நாக்பூருக்குச் சென்ற ராகுல் காந்தி, சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்றும், தனது கட்சி 50 சதவீத இடஒதுக்கீட்டு வரம்பின் சுவரை உடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "எனது கட்சியின் நிலைப்பாட்டை நான் கூறுவேன், கடந்த 3 ஆண்டுகளாக சாதிவாரி கணக்கெடுப்பு கோரி வருகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் உண்மைகளை நாட்டுக்கு கொண்டு வர வேண்டும். முதன்மையாக, சாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு வரம்பை அதிகரிப்பது குறித்த முடிவை எளிதாக்க உதவும் என்று தெரிகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு இது தெளிவாகும். தவிர, ராகுல் காந்தி சொல்வது நடந்தால் இடஒதுக்கீட்டு சதவீதத்தையும் அதிகரிக்க வேண்டும்" என்று சரத் பவார் கூறினார்.

1 More update

Next Story