

மும்பை,
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்து 16 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 21 லட்சத்து 57 ஆயிரத்து 538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் பல்வேறு பகுதிகள் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பூசிகள், நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் வாயுவை அந்தந்த மருத்துவமனைகளேயே சேமித்து வைத்து அங்குள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வாயு சிலிண்டர் மூலம் பயன்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள சாகீர் ஹூசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு டேங்கரில் மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த டேக்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் வாயு மாற்றப்பட்டு நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மருத்துவமனையில் இன்று டேங்கரில் இருந்து ஆக்சிஜன் வாயு சிலிண்டர்களுக்கு மாற்றப்படும் போது எதிர்பாராத விதமாக கசிவு ஏற்பட்டது. டேங்கரில் இருந்த ஆக்சிஜன் வாயு பெருமளவு கசிந்தது. இதனால், அந்த மருத்துவமனையை சுற்றியும் ஆக்சிஜன் வாயு புகை மண்டலமாக காட்சியளித்தது.
இந்நிலையில் ஆக்சிஜன் டேங்கரில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக, அங்கு சிகிச்சைபெற்று வந்த 11 நோயாளிகள் பரிதாபமாக பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அமைச்சர் ராஜேந்திர ஷிங்கனே, இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். ஆரம்ப தகவலின் படி, 11 பேர் இறந்ததை நாங்கள் அறிந்தோம். விரிவான அறிக்கையைப் பெற முயற்சிக்கிறோம். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டோம் என்று அவர் கூறினார்.
தற்போது சம்பவ இடத்தில் ஆக்சிஜன் கசிவைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.