மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் 15-ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு: மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவிப்பு

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத கிராமப்பகுதிகளில் 15-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்துள்ளார்.
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் 15-ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு: மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவிப்பு
Published on

மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

கிராமப்புற பள்ளிகள்

இதில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகள் கூட நடத்த முடியாமல் போனது. இதன் காரணமாக 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். நடப்பாண்டும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பாடங்களை படித்து வருகின்றனர்.இந்தநிலையில் மாநிலத்தில் பள்ளிகளை திறக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இதில் முதல் கட்டமாக கொரோனா இல்லாத கிராமப்பகுதிகளில் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது. இது குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் வெளியிட்டு உள்ளார்.

8 முதல் 12 வரை

பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக அவர் கூறியதாவது:- தற்போது நிலவும் கடினமான சூழல்நிலையில் நாம் கல்வியை கலவையாக அணுக வேண்டியது உள்ளது. நாம் ஆன்லைன் கல்வி, தனியாக கற்றலை ஊக்குவித்து வரும் நிலையில், கொரோனா இல்லாத கிராமங்களில் பாதுகாப்பான முறையில் மீண்டும் பள்ளிகளை திறப்பது தொடர்பாகவும் பணியாற்றி வருகிறோம்.முதல் கட்டமாக ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்படாத கிராமங்களில், பெற்றோர் அனுமதியுடன் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற கிராம பஞ்சாயத்து தயாராக இருந்தால், அங்கு வருகிற 15-ந் தேதி முதல் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி

பள்ளிகள் அரசின் வழிகாட்டுதல்கள், நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் முதல்வேலையாக தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். 3-வது கொரோனா அலை விவகாரத்தில் அரசு மிகவும் கவனமாக உள்ளது. எனவே எந்த அலட்சியங்களுக்கும் அனுமதி இல்லை. அரசின் வழிகாட்டுதல்கள், நெறிமுறைகளை சரியாக அமல்படுத்தும் பொறுப்பு பஞ்சாயத்து தலைவர் தலைமையிலான கிராம கமிட்டிக்கு வழங்கப்படும்.மேலும் மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி பள்ளிகளை கண்காணித்து, அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com