மராட்டிய உள்ளாட்சி தேர்தல்; பாஜக கூட்டணி அமோக வெற்றி

மராட்டியத்தில் 12 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் முடிவில் பாஜக கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.
மராட்டிய உள்ளாட்சி தேர்தல்; பாஜக கூட்டணி அமோக வெற்றி
Published on

மும்பை,

மராட்டியத்தில் கடந்த 5-ந்தேதி 12 மாவட்ட பஞ்சாயத்துகள், 125 பஞ்சாயத்து சமிதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த மாதம் 28-ந்தேதி பாராமதியில் நடந்த விமான விபத்தில் முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார் உயிரிழந்தார். அவரது மறைவை அடுத்து மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. எனவே மாவட்ட பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து சமிதிகளுக்கான தேர்தல் 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.அதன்படி கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. மாநிலம் முழுவதும் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேர்தலில் ஆர்வமாக ஓட்டுப்போட்டனர். தேர்தலில் 68.28 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

உள்ளாட்சி தேர்தல் என்பதால் பல்வேறு இடங்களில் மாறுபட்ட கூட்டணிகள் அமைத்து கட்சிகள் போட்டியிட்டன. சோலாப்பூரில் பா.ஜனதாவுக்கு எதிராக சிவசேனா, உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சிகள் கூட்டணி அமைத்த சம்பவங்களும் நடந்தன.இந்த நிலையில் மாவட்ட பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து சமிதிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜனதா மற்றும் மாநில அரசில் அதனுடன் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் முன்னிலை வகித்தன.

இந்த நிலையில் 12 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜனதா 7 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஒரு இடத்தை கைப்பற்றியது. அதே வேளையில் உத்தவ் சிவசேனா, காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தன. 125 இடங்களுக்கான பஞ்சாயத்து சமிதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜனதா 52 இடங்களிலும், சிவசேனா 26 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 25 இடங்களையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) தலா 8 இடங்களையும், உத்தவ் சிவசேனா 5 இடங்களையும் கைப்பற்றியது. ஒரு இடத்தில் சுயேட்சை வெற்றி பெற்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com