

புதுடெல்லி,
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, டெல்லியில் இருந்து அசாமின் கவுகாத்தி நகருக்கு விமானத்தில் பயணம் செய்தார். அதே விமானத்தில் மகளிர் காங்கிரஸ் தலைவர் நேத்தா டிசோசாவும் பயணித்தார்.
கவுகாத்தி விமான நிலையம் வந்ததும், அனைத்து பயணிகளும் விமானத்தை விட்டு இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஸ்மிரிதி இரானியை வழிமறித்த டிசோசா, இந்தியாவில் சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்து கொண்டே செல்வதற்கு காரணம் என்ன? என்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஸ்மிரிதி இரானி, நாட்டு மக்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்களை மத்திய அரசு வழங்கி வருவதாகவும், 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இவை அனைத்தையும் தனது செல்போனில் படம் பிடித்த டிசோசா, தனது கேள்விக்கான பதில் இது இல்லை என்றார். இதனால் இருவருக்கும் இடையே விமானத்தில் வைத்தே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தயவுசெய்து பொய் பேசாதீர்கள் எனக் கூறிவிட்டு அங்கிருந்து ஸ்மிருதி இரானி சென்றார்.
இந்த சம்பவத்தை இருவருமே தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். இதனை டிசோசா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.